ஜெயலலிதா மறைந்து இன்றோடு ஓராண்டு நிறைவு




சென்னை : தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி சென்னை, ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 தொடர்ந்து 75 நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இரவு மரணம் அடைந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ஜெயலலிதாவுக்கு பெரிய அளவில் வியாதிகள் எதுவும் இல்லை. உடல்நலம் சரியில்லை என்று அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் கூட வெளியாகவில்லை. இந்த நிலையில்தான் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

 மேலும், அந்த 75 நாட்களில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த காட்சியை அப்போலோ மருத்துவமனை வார்டுக்குள் சென்று ஒரு அமைச்சர், ஐஏஎஸ் அதிகாரிகள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் என யாரும் பார்த்தது இல்லை. அந்த அளவுக்கு மர்மமாகவே அவரது மரணம் முடிந்தது. அவர் சிகிச்சை பெற்றது போன்று ஒரு புகைப்படம் கூட வெளியிடப்படவில்லை. அந்த 75 நாட்களும், அவரது நெருங்கிய தோழி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரும், சிகிச்சை அளித்த டாக்டர்களும் மட்டுமே ஜெயலலிதாவை பார்த்ததாக கூறப்பட்டது.
ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு அதிமுக கட்சியை சசிகலா கைப்பற்ற முயன்றார். பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

 அதன்பிறகு டி.டி.வி.தினகரன் கட்சியை வழி நடத்தி சென்றார். ஆனால், உள்கட்சி மோதல் அதிகரித்து தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கட்டுப்பாட்டுக்குள் அதிமுக கட்சி வந்துள்ளது. முடக்கி வைக்கப்பட்டிருந்த இரட்டை இலை சின்னத்தையும் முதல்வர் எடப்பாடி அணியினர் மீட்டனர். அதே நேரம் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எதிர்க்கட்சியினர் கோரிக்கையை ஏற்று ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் கடந்த செப்டம்பர் 25ம் தேதி அமைக்கப்பட்டது.

 இந்த கமிஷன் விசாரணை அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்த பிறகுதான் ஜெயலலிதாவின் மரணம் குறித்த உண்மை நிலவரம் தமிழக மக்களுக்கு தெரிய வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர, ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அவரது சொத்துக்களுக்கு உண்மையான வாரிசு யார்? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. போயஸ்கார்டன் இல்லம், கோடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா, பையனூர் பங்களா மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள அசையா சொத்துக்கள், தங்க, வைர நகைகள், ஆந்திரா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள திராட்சை தோட்டம் மற்றும் வீடு என சுமார் ரூ.1000 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளது. தனக்கு பிறகு இந்த சொத்துக்கள் யாருக்கு என ஜெயலலிதா உயில் எழுதி வைத்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், ஜெயலலிதா மரணம் அடைந்து ஒரு ஆண்டு நிறைவடைந்தும் இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்காமலே உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் ஜெயலலிதாவுடனே இருந்த சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் கட்டுப்பாட்டில்தான் தற்போதும் இந்த சொத்துக்கள் உள்ளது. போயஸ் கார்டன் இல்லத்தை மட்டும் ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 ஆனாலும் அதற்கான பணிகள் முடிவடையாமல் உள்ளது.
மேலும், ஜெயலலிதாவின் வாரிசு யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் அல்லது அண்ணன் மகள் தீபா ஆகியோரில் யார் வாரிசு என்பதில் இன்னும் போட்டோ போட்டி நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கும் ஒரு தெளிவான விடை கிடைக்காமல் உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது என்ற ஒரு செய்தியும் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 இப்படி ஜெயலலிதா மரணம் அடைந்து ஒரு ஆண்டு இன்று நிறைவடைந்தும், இதுபோன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் பல மர்மங்கள் தொடர்ந்து நீடித்துக் கொண்டே போகிறது. ஜெயலலிதா மரணம் அடைந்ததையொட்டி, சென்னை மெரினா கடற்கரை அருகே எம்ஜிஆர் சமாதிக்கு பின்புறம் உள்ள ஜெயலலிதா சமாதியில் அதிமுகவினர் சார்பில் முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பிரமாண்ட அஞ்சலி கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது.

 இதைத்தொடர்ந்து அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்கள், ஆதரவு கட்சி தலைவர்கள், ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகள் இன்று மலர் அஞ்சலி செலுத்துகிறார்கள். ஏராளமான போலீஸ் பாதுகாப்பும் அங்கு போடப்பட்டுள்ளது. * அவரது சொத்துக்கள் யாருக்கு * உண்மையான வாரிசு யார் * குழந்தை பிறந்ததா * விடை தெரியாமல் நீடிக்கும் மர்மங்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் அல்லது அண்ணன் மகள் தீபா ஆகியோரில் யார் வாரிசு என்பதில் இன்னும் போட்டோ போட்டி நடந்து கொண்டுதான் இருக்கிறது.
ஜெயலலிதா மறைந்து இன்றோடு ஓராண்டு நிறைவு ஜெயலலிதா மறைந்து இன்றோடு ஓராண்டு நிறைவு Reviewed by Beauty tips.tk on December 05, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.